அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். நேற்று அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதிகள், கோவிந்தபுரம் கிராமம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் (25.07.2024) அரியலூர் வட்டத்திற்குட்பட்ட, அரியலூர் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு தொடர்ந்து தூய்மை பணிகளை
தொய்வின்றி மேற்கொள்ளவும், சாலைப்பகுதிகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினை பார்வையிட்டு பால் கொள்முதல் செய்யப்படும் விவரம், பால் விநியோகம் செய்யப்படும் விவரம், மற்ற பகுதிகளுக்கு பால் உரிய நேரத்தில் அனுப்பப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் வட்டத்திற்குட்பட்ட அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) வளாகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு, உணவின் தரம், இருப்பு பதிவேடுகள், பொருட்களின் காலாவதி நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உணவு சமைக்கப்படுவதையும் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு உணவினை தொடர்ந்து சுகாதாரமான முறையில் தயாரித்து போதிய அளவில் வழங்கிட வேண்டும் எனவும், பொருட்களை தினசரி பயன்படுத்தும் முன் காலவாதியாகும் நாளை சரிபார்த்த பின்னரே பயன்படுத்தவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் அரியலூர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.