நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் துவங்கியது. இக்கூட்டத்தில் அமமுக அமைப்பு ரீதியான மாவட்ட செயலாளர்கள் 92 பேர், தலைமைக் கழக நிர்வாகிகள் 30 பேர், இணை மற்றும் துணை செயலாளர்கள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்தும், 2026ம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பில்லை. ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.