நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது போன்ற பணிகளில் விஜய் தீவிரம் காட்டிய விஜய் இப்போது கட்சியின் முதல் மாநில மாநாடு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த இடத்தில் தான் திமுக முதன் முதலாக பிரசார கூட்டத்தை நடத்தியது. அதன் மூலம் 2 தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது.
எனவே சிறுகனூர் ராசியான இடம் என விஜய்க்கு எடுத்து கூறப்பட்டதாம். அந்த வகையில் விஜய்யும் சிறுகனூரில் தான் மாநாடு என முடிவு செய்து விட்டாராம். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளனர்.
இதனால், மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் இப்போதே கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், திரைப்படம் வெளியான பிறகு மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் மாநாடு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.