அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரும் வருவது வழக்கம் . இந்நிலையில் தனது 39வது பிறந்தநாளையொட்டி பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு, அவரது மனைவி மற்றும் மகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவரது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுததுக் கொண்டனர்.
தொடர்ந்து மூலவரான முருகன் மற்றும் பெருமாள் சன்னதி, தட்சிணா மூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் குருக்கல் யோகிபாபுவுக்கு மாலை மற்றும் சால்வையணிவித்து, முருகப்பெருமானின் வேல் அடங்கிய பிரசாத தட்டை வழங்கினர். தொடர்ந்து செல்பி கேட்ட தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஆகியோரை அருகில் அழைத்து அனைவருடனும் சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்து, அனைவருடனும் இயல்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.