டில்லியில் வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி செலகிறார். டில்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்ல கட்டடத்திற்கு 26ம் தேதி அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின், 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இந்நிலையில், வரும் 26ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமரை சந்திக்கும்போது தமிழ்நாட்டுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசி கூடுதல் நிதி ஒதுக்கும்படி கேட்பார் என தகவல் வெளியாகி உள்ளது.