கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சுகுமார் என்பவர் தட்டாங்குட்டை ஏரிப்பகுதியில் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குடியாத்தம் தாலுகா காவல் நிலையப் போலீசார் 2013 அக்டோபர் 1-ம் தேதி… சந்கேத்தின் அடிப்படையில் குடியாத்தம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால் உட்பட ஹோமியோபதி மருத்துவர், ஆட்டோ ஓட்டுநர் ஆகிய மூன்று பேரை விசாரணைக்காக பிடித்துச்சென்றனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன், தலைமைக் காவலர் உமாசந்திரன் ஆகிய மூவரும் கஸ்டடியில் இருந்த ராணுவ வீரர் கோபால் உட்பட மூவரையும் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸ் காவலிலேயே கோபால் உயிரிழந்திருக்கிறார். ஆனால் போலீசார் தரப்பில் விசாரணைக்குப் பயந்து கோபால் கைவிலங்கால் கழுத்தை நெரித்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த… கோபாலின் குடும்பத்தினரும், உறவினர்களும், `விசாரணை என்கிற பெயரில் கொலைச் செய்துவிட்டார்கள்’ என்று புகார் தெரிவிக்கவே… விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. நீதிபதி முன்னிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோபாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி-யே நேரில் விசாரணை மேற்கொண்டு இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ இன்பரசன், ஏட்டு உமாசந்திரன் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ‘கண்காணிப்பில் தொய்வு’ காட்டிய அப்போதைய குடியாத்தம் டி.எஸ்.பி-யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முரளிதரன் உட்பட மூன்று போலீசாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார். இன்ஸ்பெக்டர் முரளிதரன், இப்போது வேலூர் கலால் பிரிவில் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..
- by Authour
