வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டு மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.
தற்போது இந்திய மாணவர்கள் 300 பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.