கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24 தேதி அன்று காலை பூட்டிய வீட்டில் நெருப்பு புகை வருவதாக தகவல் கிடைத்தவுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வீட்டில் வசித்து வந்த கமலேஸ்வரி(62), அவரது மகன் சுதன்குமார்(40) பேரன் நிஷாந்த் (10) ஆகியோர் கத்தியால் வெட்டப்பட்டு, எரிந்த நிலையில் இருந்ததை கண்டு காவல்துறை தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். விசாரணை முடுக்கி விடப்பட்டது.