ஆடி முதல் வெள்ளி என்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரங்கள் நடக்கிறது. பெண்கள் காலையிலேயே அம்மன் கோவில்களுக்கு சென்ற வழிபட்டனர்.
கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால் ,தயிர், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், மஞ்சள், திருமஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நறுமண பூக்களால் வேம்பு மாரியம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.