இந்துக்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது முக்கியமான நாள். அதுவும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக சக்தி தேவியின் அவதாரங்களான அம்மன்களை இந்த நாளில் விரதமிருந்து அதிகமாக பெண்கள் வழிபடுவார்கள். ஆடி மாதத்தின் 18ம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளி என்பதால் இன்று காலையிலேயே அம்மன் கோவில்களில் பெண்கள் குடும்பத்துடன் வந்திருந்து அம்மனை வேண்டி, விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழக்கமாகவே வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இரு்நதது. திருச்சி மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். விரதம் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்தனர்.
இதுபோல உறையூர் வெக்காளியம்மன் கோவில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் காலையிலேயே அதிக அளவில் காணப்பட்டது.