திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் , விபத்து ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை திருச்சி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். அதனை தொடர்ந்து இன்று திருச்சி கே.கே.நகர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை திருச்சி நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
திருச்சி கே கே நகர் சாலையில் பெரியார் மணியம்மை பள்ளியில் இருந்து எல்.ஐ.சி காலனி வரை சாலைகளை ஆக்கிரமித்து இருந்தஇரண்டு புறமும் உள்ள கடைகள் அனைத்தையும் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர்.
20 நாட்களுக்கு முன்பே வியாபாரிகளிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் கடைகளை அப்புறப்படுத்த மறுத்த கடைகள் அனைத்தும் இன்று ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து இரண்டு சாலைகளையும் அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.