புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரைக்குழுவினர் 56 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து வந்த பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். சங்கீதா நிலைமை மோசமாக உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த செங்கிப்பட்டி போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தி்உள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி கரூரில் இருந்து தஞ்சைக்கு அரிசி மூட்டைகள் ஏற்றி வந்து அங்கு இறக்கி விட்டு, மீண்டும் கரூர் நோக்கி சென்றபோது பாதயாத்திரை குழுவின் கடைசி பகுதியில் லாரி புகுந்தது. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.