100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். விசாரணைக்கு கரூர் அழைத்து வரப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டாளி பிரவீன் ஆகியோரை கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.இந்த விசாரணைக்கு பிறகு விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட விஜயபாஸ்கருக்கு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்துசெல்லப்பட்ட விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட அழைத்து செல்லப்பட்டனர்.