காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்தும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநில நிர்வாக குழு தலைவர் உலகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், தேசிய குழு பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பழனி அய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாஸ்கோடாகாமாவிலிருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சையில் யமறித்து கர்நாடக அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட திறந்து விட மறுப்பு தெரிவிக்கும் கர்நாடகா அரசையும், தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. .
மேலும் இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அறிவழகன், சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாய தொழிலாளர் சங்கம் மாநில குழு பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர். 12 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தை தொடர்ந்து ரயில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி முத்தமிழ் செல்வன் தலைமையில் டவுன் டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் போலீசார் மேற்கொண்டனர்.
இதுபோல திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.