Skip to content
Home » அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

  • by Senthil

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர  கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே சட்டப்படி இந்த தண்ணீரை பெறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக  சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை  தமிழக அரசு கூட்டி உள்ளது.  கூட்டத்திற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சர்  துரைமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும், சட்டமன்ற எதிர்க்கட்சியுமான அதிமுக சார்பில்  அந்த கட்சியின்  தலைமை நிலையச் செயலாளர் மற்றும்  சட்டமன்ற கொறடாவான  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.  வேலுமணி,  மற்றும் நாகை மாவட்ட அதிமுக  செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

பொதுவாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அந்த கட்சியின்  தலைவர் கலந்து கொள்ளாவிட்டால் அடுத்த நிலையில் உள்ளவர்கள் தான் கலந்து கொள்வார்கள். அதில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை அந்த கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் முடிவு செய்வார்கள்.

அதன்படி அதிமுகவில் இருந்து 2 பேரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார். காவிரி விவகாரம் என்பதால் காவிரி டெல்டா  பகுதியை சேர்ந்தவராக இருந்தால் அதுபற்றி  அரசுக்கு  எடுத்துரைக்க முடியும். அதன்படி பார்த்தால் அதிமுக சார்பில் அனுப்பப்பட்டவர்களில்  வேலுமணியை விட  ஓ.எஸ். மணியன்  காவிரி டெல்டா மாவட்டத்துக்காரர்.

ஆனால் இவர்கள் இருவரையும் விட   முன்னாள் உணவுத்துறை  அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான  காமராஜ், விவசாயத்தை பற்றி நன்கு தெரிந்தவர்.  திருவாரூர் மாவட்டம் தான் அதிகமான வேளாண் சாகுபடி பரப்பை கொண்டது. நாகை மாவட்டத்தில்  சாகுபடி பரப்பு என்பது மிக மிக குறைவு.

எனவே இந்த கூட்டத்திற்க காமராஜைத்தான் அதிமுக சார்பில் அனுப்பி இருக்க வேண்டும். அவரை ஏன் ஒதுக்கிவிட்டு,  எடப்பாடி  ஓ.எஸ் மணியன்,  வேலுமணியை அனுப்பினார் என அதிமுகவிலேயே  எதிர்ப்பு குரல் எழும்பிவிட்டது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாமே என எடப்பாடியிடம், காமராஜ் கேட்டு உள்ளார். இது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை. மேலும் திருவாரூரில் மாநாடு நடத்தி, அவருக்கு  விவசாயிகளின் காவலர் என பட்டம் வழங்க ஏற்பாடு செய்தவர் காமராஜ். அவரை இப்போது எடப்பாடிக்கு பிடிக்காமல் போய்விட்டது.  எனவே தான் காமராஜ் சென்னையில் இருந்தபோதும் அவரை ஒதுக்கிவிட்டு,  ஓ.எஸ். மணியன், எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி அனுப்பி உள்ளார்.  காமராஜை  ஓரங்கட்ட வேண்டும்  என்ற நோக்கில் அவரை  ஒதுக்கிஉள்ளனர்.

இவ்வாறு  கூறிய திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் ஷாக் ஆகி உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!