“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி இன்று அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி (வடக்கு) ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இரும்புலிக்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த 24 பயனாளிகளுக்கும், குமிழியம் ஊராட்சியைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கும் தலா ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையினையும், கிராமப்புற வீடுகளுக்கான பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் இரும்புலிக்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த 19 பயனாளிகள், குமிழியம் ஊராட்சியைச் சேர்ந்த ஒரு பயனாளி என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.16.70 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளை பழுது பார்ப்பதற்கான ஆணைகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.