நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தான் முதன் முதலாக அந்த கட்சி தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த 2 வருடங்களாக விஜய் பிளஸ்2 , மற்றும் 10ம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்து பரி்சுகள், சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இந்த நி்லையில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. விஜய் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், தூத்துக்குடி, மதுரை ஆகிய 4 மாநகரங்களில் மண்டல மாநாடும், அதன் பிறகு மாநில மாநாடும் நடத்த திட்டமிட்டு உள்ளார். 10 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், திருச்சி மாநாட்டை முதன்முதலாக செப்டம்பர் அல்லது, நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து, கட்சியின் கொள்கைகளை வெளியிட இருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதன் பிறகு குறைந்த பட்சம் 100 சட்டமன்ற தொகுதிகளிலாவது பாதயாத்திரை மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.