அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி என கல்வியை தமது ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். இன்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு கல்வித்தரத்தில் முன்னணியில் இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கல்வி கற்க வேண்டும் என்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு மகத்தானது என்பதை நன்றி பெருக்கோடு நினைவு கூர்கிறோம்.
பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாகும். சட்டபூர்வமாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, ஆயுள் தண்டனையாக வழங்கலாமே ஓழிய, மரண தண்டனை வழங்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பொதுவாக என்கவுன்டர் கூடாது என்பது எங்களது கருத்து. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி என சொல்லக்கூடிய நிலையில் என்கவுண்டர் நடந்துள்ளது. ஆனால் பொதுவாக என்கவுன்டர் கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு .
நீட் விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இந்திய கூட்டணி கட்சி முதல்வர்கள் எல்லாருக்கும் கடிதம் எழுதி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.