Skip to content
Home » ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

ஏரிகளில் வண்டல் மண் ஆழமாக எடுக்க கூடாது….. அமைச்சர் அட்வைஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும் மண்பாண்டம் செய்வதற்கும் ஏரி குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நிர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 967 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் / மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக (Removal of clay and silt) அரியலூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு  வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டிலுள்ள 84 ஏரி/குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டிலுள்ள 883 ஏரி/குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி/குளங்களாக கண்டறியப்பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழில் மற்றும் தனிநபரின் பொது பயன்பாட்டிற்கு, வண்டல் மண்/ களிமண்/ மண் எடுக்க விரும்புவோர் அருகிலுள்ள இ.சேவை மையத்தில் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி/குளங்களிலிருந்து விதிமுறைகளுக்குட்பட்டு இலவசமாக மண் எடுத்துச்செல்ல அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார்.

இதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி ஆணை இன்று செந்துறை தாசில்தார் அலுவலகத்தில்  வழங்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியினை வழங்கினார் அப்போது அருகில் இருந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம், வண்டல் மண் எடுப்பதை தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் ஆழமாக வண்டல் மண் எடுத்தால், ஏரி குளங்களில் குளிக்க வரும் குழந்தைகள் ஆழமாக உள்ள தண்ணீரில் மூழ்கி இறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே ஆழமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க கூடாது. தொடர் கண்காணிப்பில் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் அலுவலர்கள் உரிய கண்காணிப்பு செய்வார்கள் என  உறுதி அளித்தார். சமீப காலங்களில் பள்ளி குழந்தைகள் ஏரி குளங்களுக்கு சென்று குளிக்கும் பொழுது பலியாகும் சம்பவங்கள் அதிகம் ஏற்படுவதால் இந்த எச்சரிக்கை பயனுள்ளதாக அமையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!