தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர் பிறந்த நாளான இன்று இரண்டாம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 489 அரசு பள்ளிகளை சேர்ந்த 27 ஆயிரத்து 232 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் கீழ் குமிழியம் கிராமத்தில் உள்ள அரசு மானிய தொடக்கப் பள்ளியில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை பரிமாறினார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 3,063 மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காலை உணவை சுகாதாரமாகவும் சத்தானதாகவும் சமைத்து, உரிய நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கவேண்டும் என அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.