தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்தது. மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், தஞ்சை மாவட்டத் தலைவர் செந்தில்குமார், திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் நாக. முருகேசன் உள்பட மாநில கரும்பு விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இதுவரை வழங்கப்படாமல் இருக்கின்ற கரும்பு கிரயத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.
வருவாய் பங்கிட்டு முறை சட்டத்தை ரத்துச் செய்து மாநில அரசு நிர்ணயிக்கப்பட்ட கரும்பு ஆதார விலையை மாநில அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பூட்டப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நடைப்பெற்ற டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 26.01.23 அன்று நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கும், ஏப்ரல் 5 மற்றும் 6 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் போரட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்துக் கொள்வது என்றும்,
கடந்த 2022 நவம்பர் 30 முதல் தொடர்ந்து 54 நாட்களாக போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையான திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு ஆதார விலை, கரும்பு கிரய தொகை, ஆலையின் லபத்தில் பங்கிட்டுத் தொகை அனைத்தும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தெரியாமல் மோசடியாக வங்கியில் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை உடனடியாக திரும்பச் செலுத்தி கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.