திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத்தை காமராஜர் பிறந்த தினமான இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வரே குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து முதல்வரும் காலை உணவு அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு எப்படி உணவு வழங்குவீர்களோ அப்படி வழங்குங்கள். அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் இந்த திட்டத்தில் உணவின் தரம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்யுங்கள்.
தமிழ்நாட்டு குழந்தைகள் படிக்க பசி ஒரு தடையாக இருக்க கூடாது. படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்பதற்காகத்தான் நீட்டை எதிர்க்கிறோம். நாங்கள் முதலில் நீட்டை எதிர்த்து போராடியபோது, ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று கேட்டார்கள். இன்று நீட் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது.
நெருக்கடி காலத்தில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றினார்கள். இப்போது அந்த கல்வியை மாநில பட்டியலுக்கு ஒன்றிய அரசு மாற்றத் தயாரா? நீட் உள்பட எதுவாக இருந்தாலும் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருப்பதை உடைப்போம். கல்வி தான் மாணவர்களின் சொத்து. அதை யாரும் திருட முடியாது. கல்வி என்னும் சொத்தை மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும். படிங்க, படிங்க, படிங்க. படித்தால் நீங்கள் வளருவதுடன் வீடும் வளரும், நாடு வளரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ, சசிகாந்த் செந்தில் எம்.பி, திண்டுக்கல் லியோனி, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.