கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் கிருஷ்ணர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற பஜனை பாடலை பாடியவாறு தேர் திருவிழா நடைபெற்றது. தேரில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி ஆகியோரின் மூல விக்கிரகங்களுடன், பிரமாண்ட தேர் பவனி வந்தது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுடர் வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. மூல விக்ரகங்களே, தேரில் வலம் வரும் ஒரே திருவிழா இதுவாகும். தேர் பவனி வரும்போது, சிறப்பு பஜனை, ஹரி நாம சங்கீர்த்தனம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர் நிலையை அடைந்ததும், மூல விக்ரகங்கள் மீண்டும் ஜெகன்நாதர் கோவிலில் வைக்கப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இஸ்கான் தேர் ஒப்பணக்கார வீதியில் அத்தாட் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவையின் முக்கிய சாலைகளான ராஜவீதி ஒப்பனக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்களை மாற்று பாதையில் காவல்துறையினர் அனுமதித்தனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேர் திருவிழா பாதுகாப்பு பணியை கண்காணித்து வந்தனர்.