கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தின் எதிரொலியாக கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னரும் ஓப்புதல் அளித்துள்ளார். இதன்காரணமாக மதுவிலக்கு திருத்த சட்டம் 2024 அமலுக்குவந்துள்ளதால் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும். மேலும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மதுவிலக்கு திருத்த சட்டத்தின் 2024 முக்கிய சில பிரிவுகள் வருமாறு… அதாவது மதுவிலக்கு சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பட்டால் ஓராண்டுக்கு குறையாமல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படுவதோடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கள்ளச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால் அதனை விற்பனை செய்பவர்கள் உள்பட அந்த சம்பவத்தில் தொடர்புடையர்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத்தொகை விதிக்கவும் இந்த சட்டம் இடம் அளிக்கிறது.