Skip to content
Home » ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது அறிவிப்பை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ நினைவுபடுத்தும். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலை காரணமாக ஏற்பட்ட இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும்” என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தும் உணர்வற்ற செயலைச் செய்தார். அன்றைய சர்வாதிகார அரசு லட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக சிறையில் அடைத்து ஜனநாயகத்தை கொன்றது. அவசரநிலையை எதிர்த்துப் போராடிய மக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில், மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. அவசரநிலை அளித்த சித்ரவதைகள் மற்றும் நெருக்கடிகள் எனும் இருண்ட அத்தியாயத்தைப் பற்றி வரும் தலைமுறையினர் அறிந்து கெள்ள இது உதவும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *