வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று மாலை நடந்தது. 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை கூட்டம் நீடித்தது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எஸ்பி-க்கள் மணிவண்ணன் (வேலூர்), டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பர்ட் ஜான் (திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பி-க்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “காவலர்கள் ஏன் லத்தியை மறந்தார்கள். அதிகாரிகள் ஏன் துப்பாக்கி வைத்துக் கொள்ளவதில்லை. இனி, லத்தியும், கைத்துப்பாக்கியும் உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்ஐ-க்கள் தாங்கள் பணியாற்றும் எல்லையில் மக்கள் மத்தியில் பெயரெடுக்கும் அளவுக்கு பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் 800 டிஎஸ்பி-க்கள் பணியாற்றுகின்றனர். இதில், 250 பேர் உட்கோட்டங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியை முறையாக செய்யாவிட்டால் சுழற்சி முறையில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (எஸ்.எச்.ஓ), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்கப்படும்.
கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை மட்டுமே கைது செய்ய வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுங்கள். ஏன் கைது நடவடிக்கை என கேள்வி வந்தால் அதற்கான பதிலைக் கூறுங்கள். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம். காவல் துறையினர் அடிப்படை பணியை செய்ய வேண்டும். புகார் மனுக்கள் மீது எஸ்ஐ-க்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்கள் முறையாக விசாரிக்க வேண்டும் என அப்போது டேவிட்சன் தேவாசீர்வாதம் வலியுறுத்தினார்.
இந்த நிலையில்,தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:“காவல் நிலையங்களில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான அதிகாரிகள் இனி கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.