.
கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.காசி திருத்தலப் பெருமையை காட்டினும் விஞ்சிய அருள் வழங்கும் சிறப்பினை பெற்றதும் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.திருப்பணிகள் நிறைவுபெற்றதையடுத்து இன்று அதிகாலை குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 10ம் தேதி காலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஷ்வர பூஜை லட்ச்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று அதிகாலை நான்காம் கால யாக கேள்வி பூஜை நிறைவடைந்ததும் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
வேத மந்திரங்கள் முழங்க விமான ராஜகோபுரம், கடம்பவனேஸ்வரர், முற்றில்லா முலையம்மை அம்மன்,விநாயகர் முருகன், கால பைரவர், விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலவர் சாமி சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமைான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிசேக விழாவையொட்டி குளித்தலை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.