Skip to content
Home » ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா  கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டு, 133 மனுக்கள் ஏற்கப்பட்டும், 2 மனு தள்ளுபடி செய்யப்பட்டும், 10 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 78 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இம்முகாமில்  மொத்தம் 248 பயனாளிகளுக்கு ரூ.1,81,22,656 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு மக்களின் குறைகளுக்கு தீர்வுக்காணப்பட்டு வருகிறது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த திட்டங்கள் தொடர்புடைய அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆனந்தவாடி கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 113 பயனாளிகள் பல்வேறு திட்டங்களில் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், 15 வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11.07.2024) முதல் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஆனந்தவாடி கிராமத்திற்குரிய முகாம்கள் 18.07.2024 அன்று இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் நடைபெறவுள்ளது. இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து இம்முகாமில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த ஒரு நபருக்கு உடனடியாக காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

முன்னதாக, இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டார்.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) (பொ) சுமதி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.அஜிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!