Skip to content
Home » 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை. தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.

இதனால் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன் ஆவார். இவர் பெரியாரின் அண்ணன் மகன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வி.கே.சம்பத்- சுலோச்சனா சம்பத்தின் மகன் ஆவார்.

21.11.1948-ம் ஆண்டு பிறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவர் ஆரம்ப கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்தார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்முறையாக கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை இணை அமைச்சராகவும் தொடர்ந்து வணிகம் மற்றும் தொழில்கள் துறை இணை அமைச்சராகவும், ஜவுளி துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருப்பூரிலும், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன் அதற்கு பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வந்தார். இந்த நிலையில் அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைவின் காரணமாக 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் குணாதிசயம் படைத்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *