காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டதும், திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார்.
பல நேரங்களில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சி மாநகராட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் சில நேரங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
மாநகராட்சி மேயர், உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் அதிகரித்த நிலையில் கணக்கு குழு, நிதிக் குழு உட்பட பல்வேறு நிலைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களை சமாதானப்படுத்த திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த பல கட்டமுயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனைத் தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 33 பேர் சேர்ந்து மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர். அந்த மனு சரிவர இல்லை என்றுகூறி ஆணையர் செந்தில்முருகன் திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் மீண்டும் திருத்தப்பட்ட மனுவை மாநகராட்சி உறுப்பினர்கள் அளித்தனர். மாநகராட்சி ஆணையர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆட்சியரிடம் புகார் அளித்தனர். நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த மனு மீது ஜூலை 29-ம்தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பான கடிதத்தை அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் ஆணையர் செந்தில்முருகன் அனுப்பியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் அடிப்படையில் மேயரை பதவி நீக்கம் செய்ய 80 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன் அடிப்படையில் 51 பேர் உள்ள மாநகராட்சி உறுப்பினர்களில் 41 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மேயரை பதவி நீக்கம் செய்ய முடியும்.
33 பேர் மேயருக்கு எதிராகவும், 13 பேர் மேயருக்கு ஆதரவாகவும் உள்ளனர். ஒருவர் மேயருக்கு எதிராக தீவிரமாக இருந்தாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் மனுவில் கையெழுத்திடவில்லை. மீதமுள்ள உறுப்பினர்கள் எந்தப் பக்கமும் சாராமல் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 34 பேர் மேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளனர். மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர்கள் மீதமுள்ள 7 பேரின் ஆதரவை திரட்டி மேயரை பதவி நீக்கம் செய்ய தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
மேயர் தரப்பு தங்களுக்கு உள்ள 13 திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ளவர்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். காஞ்சி மாநகராட்சி முதல் பெண் மேயரின் பதவி தப்புமா? என்பது வரும் 29ம் தேதி தெரிந்துவிடும்.