சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது மனைவி லீமா ரோஸ்மேரி (36). இவர், சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர், திருச்சியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இதனால் வேளாங்கண்ணி தாஸ், அவரது மனைவி லீமா ரோஸ்மேரி இருவர் மட்டுமே ஆவடியில் வசித்து வருகின்றனர். வேளாங்கண்ணி தாஸ் கடந்த மே மாதம் 10-ந் தேதி இரவு மதுபோதையில் படுக்கை அறையில் சுயநினைவின்றி படுத்திருந்ததாக கூறி அவரது மனைவி லீமா ரோஸ்மேரி, அவரை மீட்டு ஆவடியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வேளாங்கண்ணி தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வேளாங்கண்ணி தாஸ், கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது மனைவி லீமா ரோஸ்மேரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, மதுபோதையில் இறந்ததாக நாடமாடியதாக தெரிவித்தார். இதையடுத்து லீமா ரோஸ்மேரியை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ரோஸ்மேரி அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:- எனது கணவர் தினமும் மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார். என் பெற்றோரையும் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவத்தன்று மது போதையில் படுத்திருந்த கணவர் வேளாங்கண்ணி தாசை, புடவையால் கழுத்தை நெரித்து புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் மதுபோதையில் சுயநினைவின்றி இறந்து கிடந்ததாக அனைவரிடமும் கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார்.