இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது 52) மற்றும் தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த கோகுல் (வயது 14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில இளைஞரணி தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்துள்ள முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் மாடபிடி வீரர்கள் அனைவருக்கும் காப்பிடு வசதி செய்து தர தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.. மேலும் இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம் எனவும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்..