கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் பானி பூரி கடைகளில் விற்பனை செய்யக்கூடிய உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கரூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சாலையோரமாக விற்கப்படும் பானி பூரி கடைகளில் நேற்று திடீர் சோதனையில் இறங்கினர்.
கரூர் – கோவை சாலையில் உள்ள வட மாநில தொழிலாளர் ஒருவர் விற்பனை செய்யும் சாலையோர பானி பூரி கடையில் மண்ணெண்ணெய் நிரப்பும் கேனில் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும், ரசத்தை ஊற்றி சுகாதாரமற்ற முறையில் எடுத்து வந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.
மேலும், தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள தள்ளுவண்டி கடை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானி பூரி மற்றும் மசாலா காளான் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக எடுத்துச் சென்றனர்.
குறிப்பாக வட மாநில தொழிலாளர் பானிபூரி விற்பனை செய்யும் சமயத்தில் வாயில் பாக்கு போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பானி பூரியை விற்பனை செய்வதை கண்டறிந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.