நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டறிய சைபர் குற்ற தடயவியல் தரவு ஆய்வை கொண்டு அறிய முடியாதா. நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களை மட்டும் கண்டறிந்தால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா. இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளட்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து இது குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.