திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன்(28). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நெப்போலியன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், நெப்போலியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த நெப்போலியன் தரப்பை சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.