Skip to content
Home » ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக இன்று நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடினார். ‛நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர் இல்லை. இறந்த நபர் நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. இதனால் அரசு நிலத்தில் அடக்கம் செய்ய பாருங்கள். இதற்காக அனுமதி கோரி விண்ணப்பம் செய்யுங்கள்” என கருத்து தெரிவித்தார். இதன்மூலம் பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலம் வேண்டாம். அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்பதை நீதிபதி பவானி சுப்பராயன் வலியுறுத்தினார். வழக்கு மீண்டும் வழக்கு 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கட்சி அலுவலகத்துக்கு பதில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள உறவினர் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதாக அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அரசு தரப்பில் அந்த நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம். பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அரசு அனுமதியுடன் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம் அமைத்து கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் அடக்கும் செய்யக்கூடாது என்பது தான் பிச்சனை; நினைவு மண்டபம் கட்ட பிரச்சனையில்லை. அவரது பெயரில் நினைவு மண்டபம், மருத்துவமனை எது கட்ட வேண்டும் என்றாலும் அரசு அனுமதியுடன் கட்டி கொள்ளலாம்” எனக்கூறினார். மேலும் இந்த வழக்கின்போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதனை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛அரசு மரியாதை அளிப்பது என்பது தமிழக அரசு சார்ந்த முடிவாகும். அதில் அரசு தான் முடிவு எடுக்கும். ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளது’’ எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *