தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இதில் சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி நகரை சேர்ந்த சகோதரர்கள் தர்மராஜ் (32), சரண்ராஜ் (28), திருபுவனம் சந்தோஷ் (26), குருமூர்த்தி (27), பிரிதிவிராஜ்(26), ஆகிய 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் வெடிகுண்டு வெடித்த சட்ரஸ் பகுதி மற்றும் கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் முருகன், கைது செய்யப்பட்ட தர்மராஜ், சரண்ராஜ், முருகனின் அக்கா மகன் சக்திவேல், சக்திவேல் நண்பன் சரவணன் ஆகிய ஐந்து பேரின் வீடுகளில் நேற்று, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக் தலைமையில், வெடிகுண்டு கண்டறியும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார், மோப்ப நாய்களுடன் சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த சைக்கிள் பால்ட்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் போலீசார் வருவது குறித்து அறிந்த ஊராட்சித் தலைவர் முருகன், சக்திவேல், சரவணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் வெடி பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றி தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். இதில், முருகன் உள்ளிட்ட அனைவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.