Skip to content
Home » அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு வேணுகோபால் சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை (52) அவரது வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் தாக்கினர். தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது தொடர்பாக, இறந்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், சம்பவ இடத்தின் செல்போன் டவர்களை ஆய்வு செய்து பொன்னை பாலு, திருவேங்கடம், சந்தோஷ், ராமு, திருமலை, மணிவண்ணன், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்படி, 8 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின்போது, ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த அவருடைய சகோதரர் வீரமணி மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் டிரைவர் அப்துல்கனி ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது நிலைமை அங்கு கட்டுக்குள் உள்ளது. மேலும், முக்கியமான இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தக் கொலைக்கான காரணம், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, என்ன மாதிரியான ஆயுதங்கள், வாகனங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை எல்லாம் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சரியான முறையில் விசாரித்து, நீதிமன்றத்தில் தண்டனைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது, “கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது அரசியல் காரணங்களுக்கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது,” என்றார் சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!