மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டை வழிப்பாதை அமைக்க வேண்டும், தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்க வேண்டும், தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் முன்பதிவில்லா ரயில் இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.
ரயில்வே பொது மேலாளர் மாலை 4 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஒருமணி நேரம் முன்கூட்டியே மாலை 3 மணிக்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் மட்டும் ஆய்வு நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், சரியான நேரத்துக்கு புகார் மனு அளிக்க வந்த பலர் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.