பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சபிள் (‘ஸ்டீபிள் சேஸ்’), லவ்லினா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பாட்மின்டனில் சிந்து, லக்சயா, சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். மேலும் இந்த ஒலிம்பிக்சில் கலந்து கொள்ளும் 27 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 பேரும் பட்டியலில் இடம்பிடித்தனர். தமிழகத்தின் ‘டிரிபிள் ஜம்ப்’ வீரர் பிரவீன் சித்ரவேல், உலகளவில் 23வது இடம் பெற்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் 17.02 மீ., துாரம் தாண்டி வெள்ளி வென்ற ‘டிரிபிள் ஜம்ப்’ வீரர் அப்துல்லா அபூபக்கர், 21வது இடம் பிடித்து, ஒலிம்பிக் தகுதி பெற்றார். நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள வீரர்கள் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.