Skip to content

நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு  ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார். 2ம் ஆண்டாக இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாகபரிசுகளை வழங்கினார்.

முதற்கட்டமாக, கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . கோவை, ஈரோடு, மதுரை, அரியலூர் உள்ளிட்ட 21மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.

கல்வி விருது வழங்கும் விழா திருவான்மியூரில் அதே மண்டபத்தில் இன்றுநடந்தது. இதற்காக காலையிலேயே மண்டபத்துக்கு நடிகர் விஜய் வந்திருந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் மண்டபத்துக்கு மாணவ, மாணவிகள், பெற்றோர்  வரத்தொடங்கினர். அவர்கள் வரிசையாக மாவட்டம் வாரியாக உள்ளே அமரவைக்கப்பட்டனர். சரியாக 10 மணிக்கு விழா தொடங்கியது.

அப்போது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் மேடைக்கு வந்து பேசினார். அவர் பேசியதாவது:

சாதனையாளர்களுக்கும்,  பெற்றோருக்கும், நண்பா, நண்பிகள்  அனைவருக்கும் எனது  வணக்கம். நான்  பேசவேண்டாம் என  நினைத்தேன். ஆனால்  ஒரு பிரச்னையை பேசாவிட்டால் சரியாக இருக்காது.  நீட்  தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.

நீட்  மாநில உரிமைகளுக்கு  எதிரானது. மாநில பட்டியலில் தான் கல்வி இருந்தது. அது பின்னர் ஒன்றிய அரசின்  பொதுபட்டியலுக்கு மாற்றப்பட்டது. இது தான் முதல் பிரச்னை. ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே பாடத்திட்டம் என்பது   கல்விக்கு எதிரானது.  கல்வி மாநிலத்துக்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும். பலவித  பார்வைகள் கல்வியில் உள்ளது.  இது மாநிலத்து உரிமைக்காக கேட்கவில்லை.

பன்முகத்தன்மை பலம் தான். பலவீனம் அல்ல. மாநில மொழியில் (ஸ்டேட் சிலபஸ்) படித்து விட்டு,   மத்தி்ய  கல்வி வாரியம் நடத்தும்  தேர்வில் தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்.  இது கடினமான விஷயம். மருத்துவ படிப்புக்கு இது கடினமான விஷயம்.

மூன்றாவதாக மே 5ம் தேதி நடந்த  நீட்  தேர்வில் குளறுபடி நடந்ததை  படித்தோம்.  அதன்பிறகு நீட் தேர்வு  மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. அதை நாம் புரிந்து கொண்டேம். இதற்கு என்ன  தீர்வு.?   நீட்  தேர்வு  தேவையில்லை.  அதை   ரத்து செய்ய வேண்டும்.  நீட் விலக்கு தான் தீர்வு.தமிழக  சட்டமன்றம் கொண்டு வந்த  தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக  வரவேற்கிறேன்.   ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழக மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன ? கல்வியை மாநில பட்டியலு்ககு  கொண்டு வரவேண்டும்.  இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தி, இதற்கு  சிறப்பு பொதுப்பட்டியலை  உருவாக்கி, கல்வி,  சுகாதாரத்தை  அதில் சேர்க்க வேண்டும்.

இப்போது இருக்கும்  பிரச்னை என்னவென்றால்,  கல்வி  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஒன்றிய அரசு  அவர்களுடைய  கட்டுப்பாட்டில் உள்ள  மருத்துவ கல்லூரிக்கு  எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றுக்கு நீட் தேர்வு நடத்த வேண்டும்.   இது என்னுடைய ஆலோசனை தான். நடக்குமா என்பது தெரியவில்லை. நடக்க விட மாட்டார்கள். ஆனாலும் என்னுடைய ஆலோசனையை பகிர்ந்து கொள்கிறேன்.

வந்திருக்கும்  குழந்தைகளுக்கு  சொல்கிறேன்., ஜாலியாக படியுங்கள், வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.  ஒரு முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், கடவுள் இன்னொரு வாய்ப்பு உங்களுக்கு வைத்திருக்கிறார். நம்பிக்கையோடு  இருங்கள். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.  தொடர்ந்து விஜய் பரிசுகள், விருதுகள் வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!