சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப்பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக சபீர் அலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகத்தின்பேரில் விமான நிலைய அதிகாரி செல்வ விநாயகம் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை சா்வதேசவிமான நிலையத்தில், தங்கம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அண்ணா பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள ஏா்ஹப் கடையின் விற்பனையாளரை சென்னை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா். அப்போது அவா் மலக்குடலில் மறைத்து வைத்து 3 சிறு பண்டல்களில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தியது தெரியவந்தது.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பிரித்வீ தமிழக பாஜகவில் மாணவரணியில் மாநில பதவியில் இருந்து வந்துள்ளார்; பிரித்வீ தன்னை அண்ணாமலையின் பினாமி எனக்கூறி விமான நிலையத்தில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பண வசூல் செய்துள்ளார். பிரித்வீ வீட்டில் சோதனை நடத்த சென்ற சுங்கத்துறை அதிகாரிகளை அண்ணாமலை போனில் அழைத்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.