தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 2ம் ஆண்டாக இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாகபரிசுகளை வழங்குகிறார்.
முதற்கட்டமாக, கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . கோவை, ஈரோடு, மதுரை, அரியலூர் உள்ளிட்ட 21மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.
கல்வி விருது வழங்கும் விழா திருவான்மியூரில் அதே மண்டபத்தில் இன்றும் நடக்கிறது. இதற்காக காலையிலேயே மண்டபத்துக்கு நடிகர் விஜய் வந்திருந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் மண்டபத்துக்கு மாணவ, மாணவிகள், பெற்றோர் வரத்தொடங்கினர். அவர்கள் வரிசையாக மாவட்டம் வாரியாக உள்ளே அமரவைக்கப்பட்டனர். 9.30 மணி அளவில் விழா தொடங்கும் என தெரிகிறது.