பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
தடையில்லா சான்று வழங்குவதற்கு தங்களுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியர் பழனியப்பன் கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்சம் தர விரும்பாத தனியார் திருமண மண்டப மேலாளர் துரைராஜ் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகி உள்ளார். அவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்து துரைராஜ், லஞ்ச பணத்தை கொடுக்க வந்திருப்பதாக துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் தெரிவித்த போது, அவர் அங்கிருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை வாங்கி வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவ்வாறு நல்லுசாமி ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை துரைராஜிடமிருந்து வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துணை வட்டாட்சியர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து, கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துணை தாசில்தார் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதையடுத்து அவரை ஆஸ்பத்தி்ரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் ஆஸ்பத்திரியில் இல்லை. அவர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார் என தெரிகிறது.