மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும், கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் பட்டியல் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.