மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடி என முழக்கமிட்டனர்.
சிவபெருமானின் படத்தை காட்டி தன்னுடைய உரையை தொடங்குவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார். அப்போது, அவையில் சிவபெருமானின் படத்தை காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா ? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பனார். சிவபெருமானின் படம் அல்ல, எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது அவை விதி என சபாநாயகர் தெரிவித்தார். பின்னர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசியதாவது:
நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.நான் உள்பட எதிர்க்கட்சியினர் பலரும் குறிப்பிட்டு தாக்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.என் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள், இரண்டு ஆண்டு சிறை தண்டனை போடப்பட்டது. என்னிடம் 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. எதற்கும் அஞ்சாமல் கல்லை போல அமர்ந்திருந்ததாக விசரணை அதிகாரி என்னிடம் தெரிவித்தார். என்னுடைய வீடு என்னிடமிருந்து பறிக்க்கப்பட்டது, அது குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்திய அரசியலமைப்பை காப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளது. மற்ற உயிரினங்கள் போல நாங்களும் பிறப்போம், இறப்போம். ஆனால், பிரதமர் மோடி பயாலஜிக்கலாக பிறக்காதவர். காந்தி இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல. நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றித்தான் பேசுகின்றன. இந்த தேசம் அகிம்சையின் தேசம், அச்சப்படும் தேசமல்ல. சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.
‘மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட தெரிவிப்பதில்லை. அவர் பாஜக தலைவர்களைக்கூட பயமுறுத்தி வைத்திருக்கிறார். அவைக்கு வரும்போது மோடி என்னைப்பார்த்து சிரிப்பது கூட இல்லை. பாஜகவில் உள்ள இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல. வன்முறையாளர்கள்.
எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு அதிகாரம் முக்கியமல்ல. அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கிறோம். மணிப்பூரில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஆனாலும் மோடி அங்கு போக மாட்டார். அவரைப்பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல.(அப்போது பாஜகவினர் முழக்கம்)
வாரணாசிக்கு பதில் பைசாபாத்தில் மோடி போட்டியிட்டிருந்தால் தோற்றிருப்பாார். அக்னி வீர் திட்டத்தில் சேர்ந்த வீரர்களுக்கு எந்த பலனும் இல்லை. பி்ரதமருக்கு கடவுளுடன் நேரடித் தொடர்பு என நான் கூற வில்லை. அவர் தான் கூறினார். நேரடி தொடர்பு என கூறியபோதும் ராமர் அவரை கைவிட்டு விட்டார். மோடி ஆட்சியில், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடக்கிறது.
பணமதிப்பிழப்பு மூலம் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்து விட்டார். சிறுகுறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். (பாஜகவினர் கடும் எதிர்ப்பு குரல், காங்கிரசாரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டது) பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி குறித்து கடவுள் தான் மோடியிடம் கூறினாரா? மும்பை விமான நிலையத்தை அதானிக்கு கொடு என கடவுள் தான் கூறினாரா
விவசாயிகள் விரும்பாத சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என பாஜக கூறியது. அயோத்தி பற்றிய பேசியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு கொடுத்தீர்கள். உள்ளூர் மக்களை அழைக்கவில்லை. அயோத்தி விமான நிலையம் கட்டப்பட்ட இடம் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட இடம். இந்தியா என்பதற்கான கருத்தி்யலே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த தாக்குதல் நடக்கிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் குஜராத்திலும் பாஜக தோற்கடிக்கப்படும். நீட் குறித்து விவாதிக்க பாஜக மறுக்கிறது.
நீட் முறைகேடு பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லை. நீட் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. அதானிக்கும், அம்பானிக்கும் கடனை தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யாதது ஏன்? பாஜக ஆட்சியில் 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. பணக்காரர்களுக்காகவே நீட் கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபார ரீதியாக நீட் நடத்தப்படுகிறது. நீட் முறைகேடு குறித்து இங்கு விவாதிக்க வேண்டும். நீட்டுக்காக மாணவர்கள் வருடக்கணக்கில் தயாராகிறார்கள். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கி விட்டனர். எதிர்க்கட்சித்தலைவர்கள் கைது செய்யப்படும்போதுழ நான் வேடிக்கை பார்க்க முடியாது.
எனக்கு எந்த தனிப்பிட்ட விருப்பங்களும் இல்லை. இந்த அவையின் இறுதி அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது. சபாநாயகரின் நடவடிக்கை தான் ஜனநாயகத்தை உருவகப்படுத்தும். மோடிக்கு கைகொடுக்கும்போது சபாநாயகர் தாழ்ந்து கைகொடுத்தார். சபாநாயகர் யாருக்கும் தலைகுனியக்கூடாது. சபாநாயகர் யாருக்கும் தலைகுனியக்கூடாது. மக்களவைக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நாட்டை முன்னேற்ற ஒருங்கிணைந்து பயணிப்போம்.240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து.
எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த சொன்னால் அதை சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்தாதீர்கள்.
இவ்வாறு ராகுல் பேசினார். அவர்சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக பேசினார்.
ராகுல் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு பேசினார். அப்போது அவர், நான் அரசியல் அமைப்பு சட்டப்படி நடக்கிறேன் என்றார்.(இதைக்கேட்ட ராகுல் கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சித்தலைவருக்கு மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை என்றார்)
அமித்ஷா குறுக்கிட்டு, ராகுல் இந்துக்களை அவமானப்படுத்திவிட்டார். அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார். அக்னி வீரர்கள் குறித்து ராகுல் கூறிய கருத்துக்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறுக்கிட்டு பதிலளித்தார். இது தவிர பெரும்பாலான பாஜகவினர், மேலும் சவுகான், கிரண் ரஜிஜூ என பல அமைச்சர்கள் ராகுலை பேச விடாமல் குறுக்கீடு செய்தனர்.
பாஜக, காங்கிரஸ் ஆகிய இருதரப்பு எம்.பிக்கள் மக்களவை விதிகள் அடங்கிய புத்தகத்தை சுட்டிகாட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.