மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு வரை இந்தக் கூட்டணி ஆட்சியில் இருந்தன. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.அத்துடன் என்சிபி.யில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவாரும் ஆதரவளித்தார். ஏக்நாத் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்காக கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று கூறியதாவது.. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும். பெரிய எதிர்க்கட்சிகளுக்கு நான்ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தேர்தல் கூட்டணி, தொகுதிபங்கீட்டின் போது சிறிய கட்சிகளின்உணர்வுகளுக்கு கடந்த மக்களவைதேர்தலின்போது செய்ததைப் போல மதிப்பளிக்க வேண்டுகிறேன். மகாராஷ்டிர மக்கள்ஒற்றுமையாக இந்த தேர்தலில் செயல்பட வேண்டும். மாநிலத்தில் நல்ல மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியம். மகாபாரதத்தில் அர்ஜுனன் மீனின் கண்ணை மட்டுமே குறி வைத்ததுபோல், நாம் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு சரத் பவார் கூறினார்.