சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை.. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் 28, தேவாலாவில், 19; பிரையர் எஸ்டேட் பகுதியில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.