சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.
கர்நாடகா, தெலங்கானாவில் மொத்த பட்ஜெட் தமிழகத்தை விட குறைவாக இருந்தாலும், ஐடி துறைக்கு கர்நாடகாவில் ரூ.750 கோடி, தெலங்கானாவில் ரூ.776 கோடி ஒதுக்கப்படுகிறது. குறைந்த நிதியில் தமிழக ஐடி துறை சிறப்பாக செயல்படுவதற்கு, தமிழகத்தில் உள்ள மனித வளத்தின் வெளிப்பாடு தான் காரணம்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், ‘‘இப்போது தெரிகிறதா, உங்களிடம் இருந்து நிதி கேட்க நாங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம் என்பது’’ என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தியாகராஜன், ‘‘அன்று நான் நிதியமைச்சராக இருந்தபோதும் ஐடி துறைக்கு இந்த அளவுதான் நிதி ஒதுக்கினோம். அவர் (அவை முன்னவர்) துறைக்கு நான் இருந்த போதும் சரி, யார் நிதியமைச்சராக இருந்தாலும் பல ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். என்னை பொறுத்தவரை நிதி மூன்றாவது முக்கியத்துவமான விஷயம். முதலாவது முதல்வரின் ஆதரவும், ஊக்கமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிதியமைச்சராக இருந்த போது 20 ஆண்டுகள் செய்யாத மாற்றங்களை 2 ஆண்டுகளில் செய்தேன். அதேபோல் ஐடி துறையிலும் செய்ய முடியும்’’ என்றார்.