உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில் வராஹி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதன்படி 22-ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா அடுத்த மாதம் (ஜுலை) 5ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான 5ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. முதல் நாளில், வராஹி அம்மனுக்கு இனிப்புகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.
2ம் நாளான 6ம் தேதி வராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம், 7ம் தேதி குங்குமம், 8ம் தேதி சந்தனம், 9ம் தேதி தேங்காய்ப்பூ, 10ம் தேதி மாதுளை, 11ம் தேதி நவதானியம், 12ம் தேதி வெண்ணெய், 13ம் தேதி கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
விழா நாட்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
பஞ்சமி தினமான 10ம் தேதி (புதன்கிழமை) காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினரால் 1000 பேருக்கு மேல் சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்படும்.
15ம் தேதி மாலை 5 மணிக்கு நாதஸ்வரம், கரகாட்டம், ஒயலாட்டம், ஜெண்டை வாத்தியம், வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.